சிற்பக் கலையைப் பரம்பரைத் தொழிலாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர், அராலி அமெரிக்கன் மிஷன் மற்றும் சரஸ்வதி மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் கற்று எஸ்.எஸ்.சியில் (இன்றைய க.பொ.த.சாதாரண தரம்) சிறப்புச் சித்தி பெற்று மானிப்பாய் இந்துக் கல்லூரியில் உயர்கல்வி பயின்றார். எனினும், கலை மீது கொண்ட அதீத ஆர்வம் காரணமாக உயர் கல்வியைப் பூர்த்திசெய்யவில்லை. தனது தந்தை மற்றும் மாமன்மார்களிடம் சிற்பத் தொழிலை வரன்முறையாகக் கற்றுக்கொண்டார். அத்துடன், ஆலய வாகனங்களையும் சிற்பங்களையும் அழகுடன் உருவாக்கித் தனது இளவயதிலேயே சிறந்த சிற்பாசாரி என்ற பெயரைத் தனதாக்கிக்கொண்டார்.

ஆலயங்களுடன் தொடர்புடைய புனிதமான பணிகளில் ஈடுபட்டுவரும் இவர், தவில்- நாதஸ்வரக் கலைஞர்களுடன் நட்புறவைப் பேணி வந்தது குறிப்பிட்ட சிறப்பம்சமாகும். அத்துடன், மங்கல இசையின் இரசிகனாகவும் ஆன்மீகவாதியாகவும் மிளிர்ந்துவந்தார்கள். சமூகத் தொண்டிலும் விருப்புடன் ஈடுபட்டுவந்தது எல்லோராலும் பாராட்டப்பட்டது.

இவர் ஆற்றிவரும் கலைப்பணிக்காக கலைஞானகேசரி, ஸ்ரீசண்டிகா சிற்பக்கலைஞான சேகரம், கலாவிநோதன், திட்ப-நுட்ப சிற்பக் கலாமணி, சிற்பக் கற்பகம், சிற்பக் கலைமாமணி, ரதாதி நாதஸ்வர சிற்ப கற்பகம், நாதஸ்வர சிற்ப வித்தகர், வண்ணபுரத்துச் சிற்பக்கலை வேந்தன் போன்ற எண்ணற்ற பட்டங்களையும் விருதுகளையும் தங்கப்பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

கலை மீதான ஆர்வம் தங்களுக்கு எப்படி வந்தது என வினவிய போது அமரசிங்கம்அவர்கள் கூறுகையில் தங்களது குடும்பம் கலைப்பின்னணியைக் கெண்ட குடும்பம், சிற்பக் கலையைப் பரம்பரைத் தொழிலாகக் கொண்ட குடும்பம். “ நட்டுவன் பிள்ளைக்கு நொட்டிக் காட்டத் தேவையில்லை” என்று கூறுவார்களே! அதுபோன்று அவருக்கும் சிற்பக் கலை மீது இயல்பாகவே ஈடுபாடு வந்துவிட்டது. இது அவர்களுக்கு ஆத்ம திருப்தியைத் தரும் தொழிலாக உள்ளது என கூறியிருந்தார்கள்.

நாதஸ்வர உருவாக்கத்தில் தங்கள் மனம் சென்றமை குறித்துக் கூறமுடியுமா என வினவிய போது அமரசிங்கம் அவர்கள் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில், இலங்கையர்கள் இந்தியாவுக்குச் செல்வதும் அங்கிருந்து பொருட்களை எடுத்துவருவதும் தடைப்பட்டுப் போனது. இதில் நாதஸ்வரக் கருவிகளின் இறக்குமதியும் முற்றிலுமாக நின்றுபோனது. இதனால், நாதஸ்வரக் கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். என்ன செய்வதென்று தெரியாது விழித்தனர். அந்தக் காலத்தில் நாதஸ்வரத்துறையில் பெரும் புகழ் பெற்றிருந்த அவர்களது நண்பரான மூளாய் பாலகிருஷ்ணன் அவர்களை அணுகி புதிதாக நாதஸ்வரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு தங்களது கலைஞர்களின் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். இவ் வேணடுகோளைச் சவாலாக ஏற்றுக்கொண்ட அமரசிங்கம் அவர்கள், நாதஸ்வரக் கருவியின் அளவுப் பிரமாணங்களையும் அக்கருவியில் கவனிக்கப்பட வேண்டிய நுட்பங்களையும் ஆழமாக நிதானமாக ஆராய்ந்து, தங்களது இசையறிவின் துணையாலும் சாதித்துவிட வேண்டும் என்ற துடிப்பாலும் 23 ஆவது வயதில் நாதஸ்வரக்கருவியை உருவாக்கி இலங்கையில் வரலாற்றுச் சாதனை படைத்தார்கள். உங்கள் நாதஸ்வரக்கருவி எத்தனையாம் ஆண்டு, எங்கே நாதமழை பொழிந்தது என வினவிய போது அமரசிங்கம் அவர்கள் 1968 ஆம் ஆண்டு நவராத்திரி தினத்தன்று தங்களது இல்லத்தில் மூளாய் பாலகிருஷ்ணன் அமரசிங்கம் அவர்களினால் உருவாக்கப்பட்ட நாதஸ்வரத்தை வாசித்து, அதனை ஏற்றுக்கொண்டார். அத்துடன், அதன் சிறப்பையும் தனித்துவத்தையும் விதந்துரைத்து, அமரசிங்கம் அவர்களை வாழ்த்தி இப்பணியை அமரசிங்கம் அவர்கள் செவ்வனே தொடர ஆசீர்வதித்தும் சென்றார். இதுவரை எத்தனை நாதஸ்வரக்கருவிகளை உற்பத்திசெய்துள்ளீர்கள் என வினவிய போது அமரசிங்கம் அவர்கள் இதுவரையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான நாதஸ்வரக்கருவிகளை உருவாக்கியுள்ளேன். அத்துடன், இத்துறையில் வல்லவர்கள் பலரையும் உருவாக்கியுள்ளேன். இது அமரசிங்கம் அவர்களுக்கு ஆத்மதிருப்தியையும் ஆழ்ந்த மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.

நாதஸ்வரக்கருவி குறித்துச் சுருக்கமாகக் கூறுங்கள் என வினவிய போது அமரசிங்கம் அவர்கள் தென்னக இசைக்கருவிகள் அனைத்தின் உருவாக்கத்திலும் தற்காலத்தில் புதுமைகள் புகுத்தப்படுகின்றன. எனினும், சில கருவிகள் பழைமையான முறைகளை அனுசரித்தே உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களின் இசையின் முதன்மையான தோற்கருவிகளான மிருதங்கம், தவில் முதலான கருவிகளைத் தற்காலக் கலைஞர்கள் இலகுவான முறையில் உருவாக்கிப் பயன்படுத்தி வருகின்றனர். ஆயினும், மங்கல இசைக்கருவிகளுள் ஒன்றான நாதஸ்வரம் எனும் இசைக்கருவியானது இன்றுவரை எந்தவிதமான மாற்றங்களையும் உள்வாங்காமல் பழைமையின் சின்னமாக உள்ளது. அத்துடன், தமிழரின் பண்பாட்டு அடையாளமாகவும் திகழ்கிறது. இக்கருவியை உற்பத்தி செய்வது நுட்பமான வேலை. இதனால் தான் இது எல்லோராலும் உருவாக்கப்படமுடியாததாகத் திகழ்கிறது.

உங்களால் உற்பத்திசெய்யப்பட்ட நாதஸ்வரக் கருவிகளைப் பயன்படுத்துவோர் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என வினவிய போது அமரசிங்கம் அவர்கள் ஆலய வழிபாடுகளில், இசை விழாக்களில், மங்கல வைபவங்களில் நாதமழை பொழியும் நாதஸ்வரக் கலைஞர்களின் புனிதமான கரங்களில் தங்களால் உருவாக்கப்பட்ட கருவிகள் இருந்து அவர்களுக்கு வாழ்வளிக்கின்றமை தங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது எனக்குறிப்பிட்டார். தங்களால் உருவாக்கப்பட்ட நாதஸ்வரத்தை ஈழத்தின் நாதஸ்வரக் கலைஞர்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனை நாதஸ்வரச் சக்கரவர்த்தி என்.கே.பத்மநாதன் ஏற்று அங்கீகரித்த பின்னர் அனைத்து நாதஸ்வரக் கலைஞர்களும் என்னிடமிருந்துதான் நாதஸ்வரக் கருவிகளைப் பெற்றுக்கொள்கின்றனர். கே.எம்.பஞ்சாபிகேஷன், எம்.பி.பாலகிருஷ்ணன், ஆர்.சுந்தரமூர்த்தி, கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி, ஆர்.கேதீஸ்வரன் போன்ற மேதைகள் முதல் தற்கால நாதஸ்வரக் கலைஞர்கள் வரை அனைவரது கரங்களிலும் அமரசிங்கம் அவர்களின் கை வண்ணத்தில் உருவான நாதஸ்வரக் கருவிகளே தவழ்ந்து இசைபரப்பி வருகின்றன. மேலும், ஈழத்துக் கலைஞர்கள் மட்டுமன்றித் தமிழகக் கலைஞர்களான மாம்பலம் சிவா, நடராஜன், இளையராஜா, கார்த்திகேயன் முதலானோரும் அமரசிங்கம் அவர்களுடன் இருந்தே நாதஸ்வரக் கருவிகளைப் பெற்றுவருகின்றனர்.

ஆலய தேர் மற்றும் வானங்களைச் செய்யும் சிற்பாசாரியாராகவும் தாங்கள் உள்ளீர்கள். இதுவரை எத்தனை தேர்களை வடிவமைத்துள்ளீர்கள் என வினவிய போது அமரசிங்கம் அவர்கள் இதுவரை 25இற்கும் அதிகமான தேர்களையும் பலநூறு வாகனங்களையும் உயிரோட்டத்துடன் படைத்தளித்திருக்கிறேன். கொழும்பு பொன்னம்பலவானேஸ்வரர் கோவில், பருத்தித்துறை கோட்டுவாசல் முத்துமாரியம்மன் கோவில், அராலி வண்ணபுரம் சிவன் கோவில், அராலி வடக்கு முருகமூர்த்தி கோவில், மாதகல் பாணாவெட்டி அம்மன் கோவில், சங்கரத்தைப் பத்திகாளி கோவில், அரியாலை பிரப்பங்குளம் முத்துமாரி அம்மன் கோவில், சுழிபுரம் பறாளாய் பிள்ளையார் கோவில் முதலானவற்றை உதாரணமாக குறிப்பிட்டுக் கூறலாம்.

ஒரு தேரை வடிவமைத்து முடிக்க எடுக்கும் காலம் பற்றிக் கூறுங்கள் என வினவிய போது அமரசிங்கம் அவர்கள் ஆலய நிர்வாகத்தினருக்கும் தங்களுக்குமிடையே பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்படிக்கை செய்யப்பட்டுத் தேர் வேலைப்பாடுகளைத் தொடங்குவோம். அதனை வடிவமைத்து முடிக்க இன்ன காலம் செல்லும் என்று உறுதிபடக் கூறமுடியாது. ஓன்றில் ஆலய நிர்வாகத்தினரின் சுணக்கமாக இருக்கும் அல்லது எமது சுணக்கமாக இருக்கும். அதனைச் செய்து முடிப்பதற்குக் கடவுளின் அனுக்கிரகமும் வேண்டும்.

தேர் வேலை செய்யும் போது எதிர்நோக்கும் சவால்கள் குறித்துக் கூறுங்கள் என வினவிய போது அமரசிங்கம் அவர்கள் கோவில் கட்டும் போதோ அல்லது கோபுரம் கட்டும் போதோ அவை காலப்போக்கில் ஒவ்வொரு பகுதியாக உடைந்து விழலாம். அவற்றை மீண்டும் அந்த இடத்தில் வைத்தே திருத்த வேலை செய்யலாம். ஆனால், தேரோ அல்லது சப்பறமோ (சப்பைரதம்) அப்படி அல்ல. அவை பழுதுற்றால் முழுவதும் கழற்றிப் புதுப்பிக்க வேண்டும். தேரைச் செய்தவனை நம்பித்தான் இழுக்கின்றனர். பத்திரிகைகளில், ஊடகங்களில் வரும் செய்திகளில் தேர் சரிந்தது அல்லது முறிந்தது என்ற செய்திகள் வருவதைப் படித்திருப்பீர்கள். இது சாமி குற்றம் என்று ஊரில் பேசுவார்கள். அதுவல்ல உண்மை. அதனைச் செய்தவன் செவ்வனே செய்யாமை தான் காரணம் என நளினமாக கூறியிருந்தார்கள்.

அண்மையில் அமரசிங்கம் அவர்கள் இந்தியாவுக்குச் சென்று இருந்தார்கள். அங்கே உலகிலேயே பெரிய தேர் என்று சொல்லப்படுகின்ற திவாரூர்த் தேர் திரும்பக் கழற்றி வேலைப்பாடுகள் இடம்பெற்றுக்கொண்ருந்தன. வேலைப்பாடுகளுக்கு மாத்திரம் 2 கோடி ரூபா (இந்தியக் காசு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்தேரின் சில் மாத்திரம் 22 அடி நீளம். இன்று இலங்கையிலும் சரி, அல்லது இந்தியாவிலும் சரி தேர் வேலைகளை உணர்ந்து செய்பவர்கள் அருகிவருகின்றனர்.

நாதஸ்வரம் மற்றும் தேர் ஆகியவற்றை உற்பத்திசெய்வதற்குப் பயன்படும் மரங்கள் எவை என வினவிய போது அமரசிங்கம் அவர்கள் நாதஸ்வரம்- ஆச்சா மரம். இது இலங்கையில் உண்டு. ஆனால், யாழ்ப்பாணத்தில் இல்லை. வன்னிப் பிராந்தியத்தில் நிறைய உண்டு. உழவு என்று சொல்லப்படுகின்ற நாதஸ்வரத்தின் மேற்பகுதி செய்வதற்குரிய மரம் இதுவாகும். அனசு என்று சொல்லப்படுகின்ற கீழ்ப்பகுதி மருதமரம், கல்வாரை முதலான மரங்களில் செய்யலாம்.  தேர்- இலுப்பைமரம், மருதமரம், கல்வாரை. இதன் மேல் வேலைக்குப் பயன்படுபவை- முதிரை மற்றும் மஞ்சமுன்னா ஆகிய மரங்களாகும்.

சமகால தேர்ச் சிற்பக்கலைஞர்களின் நிலை குறித்துக் கூறுங்கள் என வினவிய போது அமரசிங்கம் அவர்கள் தற்காலத்தில் தேர்களை உருவாக்குவோர் சிற்பங்களுக்கு இருக்கவேண்டிய அளவுப் பிரமாணங்களையோ, தராதரத்தையோ கருத்திற்கொள்வதில்லை. இவர்கள் பொருளீட்டுவதை மாத்திமே பிரதான நோக்கமாகக் கொண்டு- தாமாகவே ஆலயங்களைத் தேடிச் செல்கின்றனர். இது மிகுந்த வேதனையளிக்கிறது என தங்களது ஆதங்கத்தினை வெளிப்படுத்தி இருந்தார்கள். தற்காலத்தில் கொழும்பிலிருந்து சில தேர்கள் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்படுகின்றன. இவர்கள் ஒரு குருவின் கீழ் இருந்து கற்றவர்களோ அல்லது தேர்வேலைத் தலத்திலிருந்து வேலை செய்தவர்களோ கிடையாது. இவர்கள் எல்லாம் இடம்பெயர்ந்து அங்கு சென்றவர்கள். சில அறிமுகக்காரரை வைத்துக்கொண்டு தாங்கள் ஒன்று செய்து பார்ப்போம் என்ற எண்ணத்தில் தேர்களை வடிவமைக்கின்றனர் என கூறி இருந்தார்கள்.

தேர்ச்சிற்றம் மற்றும் நாதஸ்வர உற்பத்தி இரண்டினுள் தங்களுக்கு ஆத்மதிருப்தியைத் தந்த கலை எது என்று வினவிய போது அமரசிங்கம் அவர்கள் கலையில் திருப்தியடைய முடியாது. ஒரு தேரைச் செய்தாலோ அல்லது வாகனத்தைச் செய்தாலோ அது உயிர்ச்சிற்பம் அல்லது உயிரோவியம் என்று சொல்லப்படுகின்ற நிலை வரும்வரைக்கும் அதில் திருப்தி கிடையாது. எனினும், நாதஸ்வரம் உற்பத்தி செய்வது திருப்தியைத் தருகிறது. இதனை நாதஸ்வரக் கலைஞன் ஏற்றுக்கொண்டால் சரி. இதில் எவரும் குறைகூற முடியாது.

தேர்ச்சிற்பக் கலைஞர்களுக்குத் தாங்கள் கூற நினைப்பது என வினவ அமரசிங்கம் அவர்கள் தேர்களை உருவாக்குவோர் சிற்பங்களுக்கு இருக்கவேண்டிய அளவுப் பிரமாணங்களையும் தராதரத்தையும் கருத்திற்கொள்ய வேண்டும். ஒரு குறிக்கப்பட்ட அளவுடைய அம்மனுக்குக் கண் வைக்க வேண்டும் என்றால், அது சிற்பசாஸ்திரம் சொல்லும் விதிமுறைக்கிணங்கத்தான் வைக்க வேண்டும். அதனைவிடுத்துத் தாம் விரும்பிய அளவில் சிற்பிகள் வைக்க முடியாது. இதனைச் சமகாலச் சிற்பக் கலைஞர்கள் கருத்திற்கொள்ள வேண்டும். யாருக்கும் எப்பவும் விலைபோகக் கூடாது. ஏல்லாவற்றுக்கும் மேலாகக் கலைப்பணியைத் தெய்வீகப் பணியாகக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்கள்.

இவ்வாறாக அமரசிங்கம் ஐயா அவர்கள் தங்களது உடல் முழுவதையும் இரத்தம் வியர்வை சிந்த நாதஸ்வர கலையை வளர்ப்பதிலும் இந்து ஆலயங்களின் வளர்ச்சிக்காக பணம் பொருள் பாராது அயராது உழைத்த ஓர் உத்தமர் எனக்கூறுவதில் பெருமிதம் கொள்கின்றோம். அன்னாரின் இழப்பு நாதஸ்வர கலை வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மேலாக தரமான சித்திர தேர்களை உருவாக்குவதில் ஏனையோருக்கு முதன்மையாக இருந்தது மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான சிற்ப கலைனர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்